28 Feb 2020

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் 2020 தாய்மொழித் தின நிகழ்ச்சிகள்

சர்வதேச தாய்மொழித்   தினம்

1999ம் ஆண்டு முதல் பெப்ரவரி மாதம் 21ம் திகதி, சர்வதேச தாய்மொழித் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும் நோக்கிலான கவசமாக தாய் மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின்   மொழித்துறையின் ஏற்பாட்டில், 17. 02. 2020 அன்று பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இவ்வருட தாய் மொழித்தின விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மொழித்துறைத் தலைவர் கலாநிதி சி. சந்திரசேகரம்   அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக   கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஜீ. கென்னடி அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார வெளிவாரி பீட அவை உறுப்பினருமாகிய திரு. த. யுவராஜன், அவர்களும் கலந்து கொண்டனர். சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் பதிற் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், பல்கலைக்கழக உதவி நிதியாளர், பிரதிப் பதிவாளர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வரவேற்புரையும், பின்னர் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. மொழித்துறைத் தலைவர் கலாநிதி சி. சந்திரசேகரம்   அவர்கள்,   தலைமையுரையில்   ''இன்று நவீனத்துவம், நவகாலனித்துவம், உலகமயமாக்கம் முதலான அதிகார முற்றுகைக்குள்   நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அதிகாரக் கருத்தியல்கள் ஒவ்வொரு சமூகத்தினதும் அடையாளங்களை, தனித்துவத்தை பண்பாட்டு மரபுகளை அழித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு அழிந்து கொண்டிருக்கும் அடையாளங்களில் தாய்மொழி பிரதானமானது. நாம் இந்நிலையில் தாய்மொழியை சிதைவுக்குள்ளாக்காமல் காலமாற்றத்திற்கேற்ப புதியதை உள்வாங்கி சமூகத் தேவையை நிறைவேற்றக்கூடியதாக அதனை வளர்க்க வேண்டும். தாய்மொழியில் புதிய கலை இலக்கியங்களைப் படைக்க வேண்டும். தாய் மொழியைப் பேணுவதும், வளர்ப்பதும் நமது தார்மீகக் கடமை'' எனக் குறிப்பிட்டார்.

கலைகலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஜீ. கென்னடி அவர்கள், தனது உரையில் ''தாய்மொழி என்பது என்றுமே நம்முடன் பிரிக்க முடியாத ஒன்று. தாய்மொழி தாயைப் போன்றது. மொழி என்றுமே உயிர்ப்புள்ளது. பிறமொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்தாலும்கூட அந்தத் தாய்மொழியில் வரும் விடயங்களை மொழிபெயர்ப்புச் செய்வது கடினம். பன்மொழியில் புலமை பெற வேண்டும், தாய்மொழியைப் பேணிப்பாதுகாக்க வேண்டும்'' என தனது உரையில் தெரிவித்தார்.

சிறப்புரையாற்றிய பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள், ''சர்வதேச தாய்மொழிகள் தினம் உலகின் தாய் மொழிகளைப் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது. பேச்சு மொழிகள் பலவும் அழிந்துகொண்டிருக்கும் இந்நூற்றாண்டில் தாய் மொழித்தினம் கொண்டாடப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது. உலகமயமாக்கம் மொழிகளின் தனித்துவத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதன் காரணமாக சுதேச மொழிகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டிஜிற்றல் யுகம் ஏற்படுத்தியுள்ள கால மாற்றத்திற்கேற்ப தமிழ் மொழியில் புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும்'' எனத் தெரிவித்தார்.

''தாய்மொழித் தினமானது தமிழ்மொழியின் தேவை கருதி நடாத்தப்படுகின்றது. தனித்தமிழ் எவ்வாறு அமைய வேண்டும், எங்கே தடையிருக்கின்றது என்பதை அறியவேண்டும். தமிழின் சிறப்பு தொன்மையில் மட்டுமல்ல அதன் தொடர்ச்சியிலும் தங்கியுள்ளது. ஒவ்வொருவரும் எல்லா மொழிகளையும் நேசிக்க வேண்டும். அதேநேரம் தாய்மொழியைச்   சுவாசிக்க  வேண்டும். 1 தொடக்கம் 5 வரை கல்விகற்கும் மாணவர்கள் பாடசாலையில் தமது தாய்மொழியிலே பாடங்களைக் கற்கின்றார்கள். அதனைத் தொடர்ந்தும் தாய்மொழி மூலம் பாடம் கற்க வேண்டும். தாய்மொழிக் கல்வி அவசியமானதும் மாணவர்களுக்கு முக்கியமானதுமாகும்.'' என்று   திரு. த. யுவராஜன் தெரிவித்தார்.

மேலும் கலைகலாசார பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களின் நடனம்; மூன்றாம், நான்காம் வருட தமிழ் சிறப்புக் கற்கை மாணவர்களின் கவியரங்கு(தமிழ்); ஆங்கிலக் கழக மாணவர்களின் கவிமுற்றம் (ஆங்கிலம்); நான்காம் வருட தமிழ் சிறப்புக் கற்கை மாணவரின் கீழடி ஆய்வுகள் - தொகுப்பு; மூன்றாம் வருட பொதுக் கற்கை மாணவியின் பாரதியார் பாடல் ஆகிய நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வை மெரூகூட்டின. இதன்பின்னர் நன்றியுரை இடம்பெற்றது. இறுதியாக தமிழ்மொழி வாழ்த்துடன் இந்நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.

  தொகுப்பு : சிவராசா ஓசாநிதி

JoomShaper