Skip to main content

பீடாதிபதியின் செய்தி

Dean-JKennedy.jpg

கல்வி என்பது எதிர்காலத்தின் கடவுச்சீட்டு ஆகும். நாளை என்பது இன்று அதற்குத் தயாராக இருப்பவர்களுக்குச் சொந்தமானது' – மல்கம் எக்ஸ். 

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி என்றவகையில் எனது பீடம் சார்பாக இச்செய்தியினை அளிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடமானது இப்பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் தொகுதிப் பீடங்களில் ஒன்றாகும். தற்போது பதினொரு துறைகள், இரண்டு புலங்களின் கீழ் மொத்தம் பதினாறு பாடங்கள் இப்பீடத்தில் கற்பிக்கப்படுகின்றன. 

முதலில் தனக்கும் ஏனைய சக மனிதர்களுக்கும் நல்ல முறையில் பங்களிப்பினைச் செய்யும் தன்மையையும் பின்னர் நாட்டையும், உலகையும் ஒட்டுமொத்தத்தில் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும், சமாதானமுள்ளதாகவும், ஆக்கவளமுடையதாகவும் மேம்படுத்தக்கூடிய அறிவாளிகளை உருவாக்குவதே இப்பீடத்தின் பிரதான இலக்காகும். சான்றிதழ் பாடநெறியிலிருந்து கலாநிதிப் பட்டம் வரையிலும் இந்த இலக்கே இறுதியானது. மனித குலத்திற்கு அன்பினையும் மனிதநேயத்தையும் கொடுப்பதன் மூலம் 'நல்லதொரு பிரஜையை' வெளிக்கொணரலாம். மார்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல, 'ஒரு தனிமனிதன் தனது தனிப்பட்ட குறுகிய எண்ணங்களுக்கு அப்பால் அனைத்து மனித குலம் பற்றிய எண்ணங்களை உயர்த்தும்வரை அவன் வாழத் தொடங்கவில்லை'.

முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தமானது இப்பிரதேசத்தில், குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள சூழலில் வாழும் மக்களின் வாழ்நிலையை வெகுவாகப் பாதித்துள்ளது. இப்பாதிப்பானது பல்வேறு வழிகளில் இச்சமூகத்தோடு தொடர்புபடுகின்றது. இதனால் இச்சமூகத்தை நல்ல முறையில் மீள் வடிவமைப்பதற்குப் புலமையாளர்களின் பங்கு அவசியமானது. எமது பீடத்தில் பெருமளவு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளிருப்பினும், என் சக புலமையாளர்கள் தங்கள் அனைத்து முயற்சிகளோடும் சமூகம் சாhர்ந்த செயற்பாடுகளை அது ஒரு சிறிய பணியாக இல்லாவிட்டாலும், அப்பணியினைத் தங்களால் இயன்றளவு செய்து கொண்டு வருகின்றார்கள். 

கல்வி ஒரு மனிதனை மனிதனாக மீண்டும் வடிவமைக்க வேண்டும் என்ற இந்த இறுதிக் குறிக்கோள் பீடத்திலுள்ள ஒவ்வொருவரையும் - அவர் ஓர் ஆசிரியராகவோ, ஓர் ஊழியராகவோ அல்லது ஒரு மாணவராகவோ இருந்தாலும்சரி அவரை நேரிய வழியில் ஊக்குவிப்பதுடன், உண்மையான மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.  

 

கலாநிதி ஜீ. கென்னடி, 

பீடாதிபதி,

கலைகலாசார பீடம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்.