இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரிகத் துறை நடாத்திய தைப்பொங்கல் விழா – 2024
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையானது பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக தைப்பொங்கல் விழாவினை பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணும் வகையில் 29.01.2024 அன்று காலை 9.30 மணிக்கு சிறப்பான முறையில் நடாத்தியது.
இந்துநாகரிகத் துறையின் தலைவர் திரு.நா.வாமன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் அவர்களும், கௌரவ அதிதியாக சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களும், சிறப்புரைஞராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ச.முகுந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பல்கலைக்கழக பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், கலை கலாசார பீட உதவிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்குகொண்டனர்.
பொங்கல் நிகழ்வும் வழிபாடும், கலை நிகழ்வுகள் என இரண்டு பகுதிகளாக நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. முதல் நிகழ்வாக அதிதிகள் பல்கலைக்கழக முன்வாயிலிலிருந்து பாரம்பரிய இசை வாத்தியங்களின் அணிவகுப்போடு, பண்பாட்டுப் பவனியாக கலை கலாசார பீட கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கேட்போர்கூட முன்றலில் புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.
வழிபாட்டினைத் தொடர்ந்து கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தலைமையுரை, அதிதிகளின் உரை, சிறப்புரை என்பவற்றுடன் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை, நடனப் பள்ளிகளின் மாணவர்கள் கலை நிகழ்வுகளை அரங்கேற்றினர். தமிழர் பண்பாட்டு மரபிற்கும், தமிழர் கலை கலாசாரத்திற்கும் ஓர் உயர் அங்கீகாரத்தினை வழங்கும் வகையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை அனைவரது பாராட்டினையும் பெற்றது.