Stage of the Enthaiyum Thayum Drama
“Enthaiyum Thayum” (Realistic Play) was directed by Mr.S.Chandrakumar, Head/ Department of fine Arts, Eastern University and staged on 05.09.2020 in the Nallaiya memorial Hall, Eastern University, Vantharumoolai. This Drama was written by Dr.Kulanthai M.Sanmugalingam.
ஈழத்தமிழர் மத்தியில் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமூக பண்பாட்டு அரசியல் மாற்றத்தினை மையப்படுத்தி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களினால் 'எந்தையும் தாயும்' எனும் நாடகம் அன்பு, பாசம், தனிமை, ஏக்கம் என்பவற்றைப் பிரதானப்படுத்தி எழுதப்பட்டது. இதன் கரு பெற்றோர்கள் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிவிட்டு பாசத்திற்காகத் தனித்து ஏங்குவதை மையப்படுத்தியது. முதல் கண்ட மூத்தமகனை நினைத்து அதனை உணர்வில் இருத்தி, இறந்த பின் கொள்ளி வைக்கும் முக்கிய நபர் எனும் பண்பாட்டு உணர்தலைக் கொடுத்து அதனைப் பேசவைப்பதாகவும் அமைகின்றது. யுத்தம், புலம்பெயர்வு, கூட்டுவாழ்தலின் சிதைவு, முதியவர்களின் பாசத்திற்காக ஏங்குதல் ஆகியன முன்னிலை வகிக்கின்றன. பல ஈழத்து அரங்க ஆளுமைகள் இந்நாடகத்தை நெறியாள்கை செய்து தயாரித்துள்ளமை குறிப்படத்தக்கது.
இந்நாடகம் நுண்கலைத்துறையின் தலைவரும் ஈழத்துக் கூத்துக் கலைஞருமான சு.சந்திரகுமாரின் நெறியாள்கையில், 2020 புரட்டாதி 05 ஆம் திகதி நல்லையா மண்டபத்தில் பாடசாலை மணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரங்க ஆளுமைகள், அரங்க செயற்பாட்டாளர்கள் மத்தியில் துறைத் தலைவரின் தலைமையில் மேடையேற்றம் செய்யப்பட்டது. இந்நாடகத்திற்கான அறிமுகம் அரங்க ஆளுமையும் முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி சி.ஜெயசங்கரினால் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக நாடகத்துறை விரிவுரையாளர் அ.விமல்ராஜ், நுண்கலைத்துறையின் விரிவுரையாளர்களான திருமதி பிரசாந்தி இளங்கோ, திருமதி துஷ;யந்தி சத்தியஜித், து.கௌரீஸ்வரன், மட்டக்களப்பு மேற்குக் கல்விவலயத்தின் நாடகப்பாட ஆசிரிய ஆலோசகர் க.பரமானந்தம், நாடகம் கற்பிக்கும் ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நாடகத்தின் நெறியாளர் சு.சந்திரகுமார் பொருத்தமான பாத்திரவாக்கத்தினைத் தெரிவுசெய்து ஒத்திகையின்போது பயிற்சியளித்து, யதார்த்தப் பாணியினை அரங்கவியல் அழகியலுடன் காட்சியாக்கி உயிர்கொடுத்திருந்தார். குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களது ஆற்றுகை ஆழத்தை வலுப்படுத்தி, நவீன நாடகத்தின் ஆழ்ந்த அனுபவத்தைப்பெற்றுப் படைப்பாக்கம், புதிதளித்தலை விரிவாக்கி, கலைஞராக்கி, அதன் அறிவையும், திறனையும் மேனிலையாக்கியமை நடிப்பிலும், ஒழுங்குபடுத்தலிலும் வெளிப்பட்டது. இதனூடாகப் பங்குகொள் ஆய்வுகளைச் செய்வதற்கும் களம் அமைத்துக் கொடுப்பதும் சமகாலத் தேவையாகும். இவ்வாறான பயிற்சி முறைமையைச் செயற்படுத்த பாடத்திட்டத்தினூடாக நுண்கலைத்துறை செயற்படுத்துகின்றது. ஆற்றுகை மையக் கற்றல் - கற்பித்தலை முன்னெடுக்கும்போது பரீட்சைக்குத் தயாராகுவதோடு, நிலைத்துநிற்கும் கல்வி அபிவிருத்தியைப் பெறுவதற்கும் வழிவகுக்கும்.
நாடகத்தின் கதை ஒரு காலகட்டத்தின் தமிழர் வாழ்வியல் முறையை மையப்படுத்தியது. அதனைச் சமகாலத்திற்கு அமைய இணைத்து காட்சிவடிவம் கொடுத்து பார்ப்போரைச் சிந்திக்க வைத்துள்ளது. கூத்தரங்கில் தாடணம் நிறைந்த நெறியாளர் நாடகத்தின் தொடக்கத்தில் பார்ப்போரைத் தயார்படுத்தி நாடகத்தினுள் உள்ளீர்க்க, உள்ளுர் விளையாட்டு, இன ஒருமைப்பாடு மூலம் இணைத்து ஆற்றுப்படுத்த மிகவும் நுணுக்கமாகக் காட்சி ஒன்று படைக்கப்பட்டு இசைவடிவத்தின் மூலம் தரப்பட்டது. இதற்கு ஊரிலுள்ள 'சுரக்காய் இழுத்து விளையாடுவது' சேர்க்கப்பட்டிருந்தது. காட்சிவிதானிப்பு, வேட உடை, ஒப்பனை என்பன தத்துருவமாக அமைந்திருந்தது.
இந்நாடகத்தின் சங்கரப்பிள்ளையாக ச.கரீஸ்தரனும், ஜயாத்துரையாக கு.சர்மிலனும், வசந்தியாக அ.பௌர்ஜாவும், கண்ணனாக த.நிறோஜனும், செல்வரத்தினமாக சு.சஞ்சீபனும், மகேஸ்வரியாக பி.சுஜாதாவும் பாத்திரமேற்று நடித்துள்ளனர். இந்நாடகத்தின் உபநடிகர்களாக ச.புஸ்பலதா, ர.சாந்தினி;, ஸ்ரீ.டிலானி, சி.டனுஷியா, சு.சுயாஜினி, ந.கேதீஸ்வரி, ப.கண்ணன், சி.சிஜானி, ச.மகிழினி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நாடகத்தின் பின்னனி பு.ரதிகலா, ற.மாக்கஸ் ஐவர், செ.டயானா, ப.கண்ணன் ஆகியோர் வழங்கியிருந்தனர். இற்கான ஒப்பனை அலங்காரம் ஞா.கபிலாஷினி (தற்காலிக உதவி விரிவுரையாளர்), ச.புஸ்பலதா, ர.சாந்தினி, ச.மகிழினி, சு.சுயாஜினி, த.கரன், இ.கிருபாகரன், மு.செ.பா.இல்மா, க.துர்காதேவி, நூ.ஹ.அஸ்மியா ஆகியோரினாலும், நாடக காட்சியமைப்பினை நுண்கலைத்துறையின் விரிவுரையாளர் திருமதி. பிரசாந்தி இளங்கோ, இரா.சுலக்ஷனா, த.கரன், இ.கிருபாகரன், ப.கண்ணன், ச.ரொபின்சன், பி.பிரபுதாஸ், லி.ஜெசிந்தாஸ், ஜெ.சுஜிரட்னம் ஆகியோராலும், பாத்திரங்களுக்கான உடையமைப்பானது அ.அ.ஆன் நிவேத்திகாவினாலும், நாடகத்திற்கான காட்சி ஒளியமைப்பு த.கவிதரன், கு.மதுசாந், நா.கேதீஸ்வரி, நீ.தர்ஷன் ஆகியோரினாலும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், மேடை முகாமைத்துவத்தினை நுண்கலைத்துறை விரிவுரையாளர்களான திருமதி.துஷ்யந்தி சத்தியஜித், திரு.து.கௌரீஸ்வரன், திருமதி.பிரசாந்தி இளங்கோ, ஞா.கபிலாஷினி (தற்காலிக விரிவுரையாளர், நுண்கலைத்துறை) ஆகியோர் ஒழுங்கமைத்தனர். மேடை ஒழுங்கமைப்பாளர்களாக அ.அ.ஆன் நிவேத்திகா, இ.சுலக்ஷனா ஆகியோர் செயற்பட்டனர். நாடகத்திற்கான எடுத்து சொல்லியாக கு.நிலுஜாவும் இணைந்து செயற்பட்டார்.